Tuesday, March 12, 2013

அமெரிக்காவில் கொண்டுவரப்படும் தீர்மானம் வரைவு ஒரு பார்வை


 அமெரிக்கா இலங்கை அரசியல் சாசனத்தின் கீழ் இயங்கும்  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முக்கியமாக செயல்படுத்த சொல்லி இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இலங்கையின் அரசியலமைப்பு சட்டம் அங்கு வாழும் தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்காமல் அவர்களை ஒடுக்கியதாலே கடந்த 60 ஆண்டுகளாக விடுதலை போராட்டம் நடந்து வருகிறது. ஒரு நாட்டின் அரசியலமைப்பு சட்டம் என்பது அந்த நாட்டின் மக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் எப்பொழுது அதில் இருந்து தவறுகிறதோ அப்பொழுது அந்த அரசியலமைப்பு சட்டம் தோல்வியடைந்ததாக அர்த்தம். 

ஆனால் அமெரிக்க தீர்மானம் தோல்வி அடைந்த ஒரு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தீர்வு காணச் சொல்கிறது. இந்த தீர்மானம் எந்த வகையிலும் ஈழத்தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காது, அமெரிக்கா தனது சுயதேவைக்காக இலங்கையிடம் பேரம் நடத்தவே இந்த் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இதை தமிழர்களாகிய நாம் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது இதை தாண்டி இந்த தீர்மானத்தை நம்மை ஏற்றுக் கொள்ள சொல்பவர்களின் எண்ணங்கள் செயல்பாடுகளை நாம் சந்தேகிக்க வேண்டிய தேவை உள்ளது.





இந்த தீர்மானத்தில் நவநீதம் பிள்ளையின் அறிக்கையை பாராட்டிய பொழுதும் அவர் சொன்ன உதவிகளை ஏற்றுக் கொள்ளலாம் என்று சொன்னாலும் அதை இலங்கை அரசின் ஒப்புதலுடனேயே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறது. போர் முடிந்து நான்கு வருடங்களாக சர்வதேசத்தை போர் நடந்த பகுதிக்கு அனுமதிக்காத இலங்கை அரசு இந்த தீர்மானத்தின் படி நவநீதம் பிள்ளை அளிக்கும் உதவிகளை ஏற்றுக் கொள்ளும் என்பது நமது கண்களை கட்டிவிட்டு மேலும் ஒரு வருடம் இலங்கை தனது இன அழிப்பு நடவடிக்கைகளை தொடர்வதற்கு உதவும் நோக்கத்துடனே கொண்டுவரப் பட்டுள்ளது.

சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை நவநீதம் பிள்ளை சொல்லியிருக்கிறார் தனது அறிக்கையில் ஆனால் அதை செயல்படுத்தும் ஒரு முறையை இந்த தீர்மானம் பேசவில்லை. அதற்கு பதிலாக கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்று மட்டும் அறிவிக்கிறது. இவர்கள் கவனத்தில் வைப்பதால் நமக்கு என்ன பயன். சரியாக செய்வதென்றால் இலங்கைக்கு ஒரு குறுகிய காலக்கெடு கொடுத்து அதற்குள் சரி செய்யவேண்டும் இல்லாவிடில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும் ஆனால் அப்படி சொல்லாமல் மொட்டையாக கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்பது எந்தவித அரசியல் என்று தெரியவில்லை.

முதலில் எஞ்சியுள்ள மக்களுக்கு நன்மை செய்வோம் என்பது நம் தமிழ் மக்களை பிச்சைகாரர்களாக்குவது தானே ஒழிய அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வழிசெய்வது இல்லை. மாணவர்கள் போராட்டம் கோரிக்கை என்பது சர்வதேச விசாரணையையும் பொது வாக்கெடுப்பையும் வலியுறுத்துகிறது. இவைகளுக்கான நடவடிக்கை எடுக்கப் படும்பொழுது சிங்கள இராணுவத்தை அகற்றிவிட்டு தமிழர்கள் வாழும் பகுதிகள் ஐ.நாவின் பாதுகாப்பு படையின் நேரடி பார்வையின் கீழ் வரும் அப்பொழுதும் தமிழர்களை பாதுகாக்க முடியும், மேலும் அவர்களுக்கான நிவாரண உதவிகளையும் வழங்க முடியும் இதை மறைத்து பேரினவாதத்தின் கைகளாலேயே நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி வருகிறரவர்கள் சிறிது யோசிக்க வேண்டும். 

No comments:

Post a Comment